Dr. Thamizhachi Thangapandian

Thangapandian Illam,
Raja Nagar, Neelangarai,
Chennai – 600 041.

எஸ்.பொ : பனிப்பிரதேசத்தின் பனைநாட்டுப் பரதேசி!

 

      ஈழமண்ணில் பிறந்து, ஆஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்து, பெரும்பான்மை வருடங்களைத் தமிழ் நாட்டில் தமது அயராத இலக்கியப் பணியில் கழித்த, எஸ்.பொ என்கிற எஸ்.பொன்னுத்துரை மாவீரர் தினமான நவம்பர் 26ம் திகதி மரணமடைந்தபோது 

      "இறுதியில் இந்த சாலையில்தான்
      வந்தாக வேண்டும் நான்
      என நன்றாகத் தெரியும்
      ஆனால்
      இன்றுதான் அந்த நாள் என்று
      எனக்குத் தெரியாது நேற்று" 
என்றொரு ஜென் கவிதை நினைவிற்கு வந்தது.

      ஈழத்தின் 'இலக்கியப் பொன்னு' என்று செல்லமாக அழைக்கப்படுகின்ற அவரது மரணம் முதுமையின் நிசர்சனம் சுமந்தாலும், இழப்பின் துயர் அதனோடு மல்லுக்கு நிற்கிறது.

      தன்னை ஓர் மூன்றாம் உலகப் படைப்பாளியாக அறிவித்துக் கொண்ட எஸ்.பொ ஈழத்தின் இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றதின் மூலம் தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கும் பங்களித்தவர். இனத்துவ விடுதலைக்கு தனது மகன் மித்ராவை கேப்டன் அர்ஜீனாவாக முதல் பலி கொடுத்தவர். அந்த மாவீரனது நினைவாகவே சென்னையில் மித்ர பதிப்பகத்தைத் துவக்கினார். அதன் முக்கிய களப்பணி - புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழர்களின் படைப்புக்களை வெளியிடுவது. அதன் மூலம் தமிழகத்தில் அதுகாறும் அவ்வளவாக அறியப்பட்டிராத ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பை ஆவணப் படுத்துதலுமாகும்.

                "சமூகத்தில் அவர் ஒரு Proletarian ஆக இருப்பினும் இலக்கியத்தில், சிருஷ்டித் திறனில், தான் ஒரு Aristocrat என்ற எண்ணம் அவருக்கு உண்டு" என்று மு.தளையசிங்கம் அவர் குறித்துப் பதிவு செய்திருக்கிறார். உலக இலக்கியம் பற்றிய எஸ்.பொவின் அறிவும், அவரது ஆங்கில மொழித் தேர்ச்சியும், மொழியாக்கத் திறமையும் அத்தைகயதொரு artisocracy உணர்வைத் தந்தாலும், அடிப்படையில் அவர் ஒரு போராளி - a Rebel.

      "என் எழுத்துப் பணி போரே
      சத்திய எழுத்தின் 
      சரஸ் விடுதலை வெறியே"

என அறிவித்து அதன்படியே வாழ்ந்தும், படைத்தும் காட்டியவர். அவரது அடிமண்ணின் வேர் யாழ்ப்பாணத்து பனைமர வேரென்றாலும், உலகளாவிய பார்வையும், அனைத்து மொழி இலக்கியங்களையும் அங்கீகரித்து, நயந்து போற்றுகின்ற, சார்பற்ற விமர்சகரும், ரசனையாளரும் கூட!

                1961ம் ஆண்டு அவரது தீ, சடங்கு புதினங்கள் வெளிவந்தபோது அவர் ஒரு பிரச்சனைக்குரிய படைப்பாளியாக ஈழத்து, தமிழ்நாட்டு இலக்கிய உலகில் விமர்சிக்கப்பட்டார். அவ்விமர்சனங்களை எஸ்.பொ எதிர்கொண்ட விதம் அபாரமானது - "Morality என்பதைத் தமிழர்கள் ஏன் எப்பொழுதும் பாலுணர்வு சார்ந்து மட்டுமே பொருள் கொள்கின்றனர்? எனது பலவீனங்களை சொல்லவும், ஒப்புக் கொள்ளவும் நான் ஏன் கூச்சப்பட வேண்டும்?" என, இன்றைக்கு 55 ஆண்டுகளுக்கு முன்பு மகா துணிச்சலுடன் எழுப்பட்ட அவரது கேள்வி இன்றளவும் கலாச்சாரக் காவலர்களை எதிர்த்து நிற்கிறதே - அது தான் எஸ்.பொ.

      ஆனால் அது மட்டுமல்ல அவர் - தமிழ்த்துவம், தமிழ்த்தேசியம், இனவிடுதலை, புலம்பெயர் தமிழர் தம் கெளரவ முகம் மீட்டெடுத்தல் - இவற்றைத் தன் எழுத்து ஊழியத்தின் அச்செனக் கொண்டவர். சிறுகதை, புதினம், நாடகம், காப்பியம், கட்டுரை, தன் வரலாற்று நூல், மொழிபெயர்ப்பு எனத் தான் இயங்கிய அத்தனை தளங்களிலும் சாதீயத்தை, ஆன்மிக வைதீகங்களை, அரசியல் ஊழல்களை, இலக்கிய கோஷ்டிகளின் வெற்று கோஷத்தைத் தொடர்ந்து எதிர்த்தவர். கவிதைத் தளம் தனக்குக் கைவரவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டவர்.

                1932 ல் ஈழத்தின் நல்லூரில் பிறந்த எஸ்.பொ சிறுகதை, விமர்சனம், புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, தன் வரலாற்று நூல், எனப் பல வகைமைகளிலும் தொடர்ந்து இயங்கியவர். உலகம் முழுவதும் பரவியுள்ள படைப்பாளிகள் பலரது அபிமானத்தையும் மதிப்பையும் பெற்றவர். மிகக் குறிப்பாகத், தமிழகத்தின் முதுபெரும் படைப்பாளிகள் முதற்கொண்டு யுகபாரதி, பச்சியப்பன், ரவிக்குமார், ஈழவாணி முதலான இளையதலைமுறைக் கவிஞர்கள் வரை, அனைத்துத் தரப்பினருடனும் உள்ளார்ந்த அன்பும், ஊக்குவிக்கின்ற தன்மையும் கொண்டு நல்லுறவைப் பேணியவர்.

      மரபு, யதார்த்தம், தேசியம், தமிழ்த்துவம், இன எழுச்சி - என்று ஈழத் தமிழ் இலக்கியத்தின் அனைத்துச் சிந்தனைப் போக்கிலும் தனது முத்திரையினைப் பதித்தவர். என்றாலும், மரபுகளை, வைதீகச் சடங்குகளை, இசங்களைக் கேள்விக்குப்படுத்தி அவற்றைத் தூக்கியெறிகின்ற எதிர்நீச்சல் அடிக்கின்ற போர்க்குணமிக்க, நவீனப் படைப்பாளியென்பதே அவரது அடையாளம்.

      இலக்கியத்தில் மட்டுமல்ல - கல்வித்துறையிலும் ஈடுபாட்டோடு பங்களித்தவர். இலங்கையில் தமிழ்ப்பாடத்திட்ட ஆசிரியராகப் பணியாற்றிப் பின் நைஜீரியாவிலும் ஆசிரியப் பணி செய்தவர். அச்சமயம் ஆப்பிரிக்க இலக்கியத்தின் முக்கியமான படைப்புக்கள் சிலவற்றை மொழிபெயர்த்தவர். "படைப்பு பேப்பர் ரிப்போர்ட் போன்றது அன்று" என அறிவித்தவர். தனது இளமைக்காலத்தை கம்யூனிஸ இயக்கத்தோடு பிணைத்து கழித்தவர். கட்சி சார்ந்தவராக இருக்க இயலாததினால், அவர் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளராகச் சித்தரிக்கப்பட்டாலும், அவரது எழுத்துக்களை ஆழ்ந்து பயில்கின்ற மார்க்சியத் திறனாய்வாளர்கள் இக்கருத்திலிருந்து நிச்சயமாக மாறுபடுவார்கள்.

      கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்மொழி, புலம்பெயர்ந்தோர் இலக்கியம், ஈழத்துப் படைப்பிலக்கியம், காந்தியம், மார்க்ஸியம், அயல்மொழி இலக்கியம், இந்திய, ஈழ அரசியல், வரலாறு, சமூகம், விமர்சனம், சமகாலப் படைப்புக்கள் எனத் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செய்த எஸ்.பொ வின் படைப்புக்களை ஒருசேரப் படித்தால் ஈழத்தின் அரசியல், சமூகப், பண்பாட்டு வரலாற்றை ஒரு கழுகுப் பார்வை பார்த்த அனுபவம் வசப்படும். அவ்வகையில் இந்த 'யாழ் நிலத்துப் பாணன்' (ஜெயமோகன் காலம் இதழில் எஸ்.பொ குறித்து எழுதிய கட்டுரையின் தலைப்பு இது) ஈழ மண்ணின் தமிழ் வரலாற்றை தனது மகாவம்ச வின் மொழிபெயர்ப்பு மூலம் மீட்டெடுத்த பாணனும் கூட.

      அவரது மரணம் தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பு. தமிழச்சி எனும் புனைபெயரில் எனது எஞ்சோட்டுப் பெண் தொகுப்பினை மித்ர வெளியீடாகப் பதிப்பித்து, இலக்கிய அரங்கில் என்னை அறிமுகப்படுத்தியவர் அவர். அவரது மித்ர பதிப்பகம் அறிவுமதி அண்ணன், யுகபாரதி, ரவிக்குமார், பச்சியப்பன் என்று என் நண்பர்கள் பலரையும் நான் பெற்ற இடமாகவும், மாலை வேளைகளில் 'முன்னத்தி ஏர்' ஒன்று பிஞ்சுகளைச் செதுக்கிய பயிற்சிப் பாசறையாகவும் இருந்தது.

      எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எஸ்.பொ வின் நெருங்கிய நண்பர். அவரைச் சந்தித்து துக்கம் பகிரச் சென்றிருக்கையில், எஸ்.பொ வின் முகமூடியற்ற எழுத்து, வாழ்வு குறித்து உரையாடநேர்ந்தது. ஆல்பர்ட் மொராவியா எனும் புகழ்பெற்ற எழுத்தாளரிடம், "நீங்கள் ஆரம்பத்தில் எழுதிய கதைகளுக்காக இன்று வருத்தப் படுவதுண்டா?" எனக் கேட்கப்பட்டபோது, "அப்படி வருந்தினால் நான் மொராவியோவாக இருக்க முடியாது. என்னால் இன்றும் அக்கதைகளை அப்படித்தான் எழுதியிருக்க முடியும்" எனப் பதில் அளித்தார். எஸ்.பொவும் ஆல்பர்ட் மொராவியா போலத்தான் என்றார் இந்திரா பார்த்தசாரதி. 

      ஒரு படைப்பிலக்கியவாதி, ஒரு பதிப்பாசிரியன் என இரட்டைக்குழல் துப்பாக்கியாக இயங்கியவர் அவர். நமது தமிழ்நாட்டு இலக்கிய உலகில் அவரைச் சிலர் இன்னும் அறிந்திடாமலிருக்கலாம். அவரது மாயினி புதினம் சமகால ஈழத்தின் அரசியல் சூழலை அப்பட்டமாகப் பகடி செய்து, புனைவுடன் எழுதப்பட்ட அற்புதமானதொரு புதினம் என்பதை இங்குள்ள இளைய நாவலாசிரியர்கள் கவனிக்கத் தவறியிருக்கலாம். 

      அதன்பொருட்டு அவரைக் கவனப்படுத்த மட்டுமல்ல - வரலாற்றில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழும் ஒரு மிக முக்கியமான தமிழ்ப் படைப்பாளியை இக்கணம் நினைவு கூர்தலே அவருக்கான சரியான அஞ்சலியாக இருக்க முடியுமென்பதால் - இப்பதிவும் பகிர்வும்.

      மற்றபடி, அவரது 'பெறா மகளாக' அவரது இழப்பைத் தனிமையின் உள்ளங்கைகளுக்குள் நனவோடையில் துய்க்கவே விழைகின்றேன்.

 

பனியெல்லாம் யாழ்ப்பனையின் கண்ணீர் : எஸ்.பொவிற்கு அஞ்சலி.

 

                "ஈழத்திலிருந்து அகதிகளாக உலகெங்கும் பரம்பி வாழ்கின்ற தமிழர்கள் மண்ணின் நேசிப்பினையும், தமிழ்த்துவத்தின் அடையாளத்தையும் மட்டும் சுமந்து புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கிறார்கள் என உரிமை கோரல் முற்றிலும் உண்மையல்ல. அவர்கள் யாழ்ப்பாண கலாச்சாரத்தினால் உருவாக்கப்பட்ட கட்டித்த ஜாதியம் முதலான ஊத்தைகளையும் சுமந்தே சென்றுள்ளார்கள்" என்று எஸ்.பொ என அன்போடு அழைக்கப்படுகின்ற முதுபெரும் ஈழத்து படைப்பிலக்கியவாதி எஸ்.பொன்னுதுரை சொன்னபோது, கண்டனக் குரல்கள் பல எழுந்தன. ஆனால் எஸ்.பொ எனும் போராளி இலக்கியவாதியின், அடையாளம் சமரசமற்ற மேற்சொன்ன இந்த எழுத்து முறைதான். புலம்பெயர்ந்த தனது தமிழினத்தின் கெளரவ முகம் மீட்டு, அவர்தம் மொழி, கலை, பண்பாட்டு வளங்களைப் படைப்பின் மூலம் நிலைநிறுத்துவதே தனது ஊழியமெனக் கொண்ட எஸ்.பொ அவர்தம் கசடுகளையும் வெளிப்படுத்தத் தயங்காதவர். 

      அவரது இந்த துலாக்கோல் பார்வைதான் 2002ல் அவரை ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் சந்தித்தபோது என்னை அவரிடம் முதலில் ஈர்த்தது. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களது தமிழ் இலக்கியப் பங்களிப்பு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று பல தரவுகளுடன் அன்று அவர் விளக்கியதோடு, புலம்பெயர்ந்தாலும் அவர்களது 'யாழ்ப்பாணத்து மேட்டிமை மனப்பான்மை சாதியம் சார்ந்தது' எனவும் கடுமையான விமர்சனம் வைத்தார். அவரது இந்த சார்பற்ற பாங்கு ஒரு முனைவர் பட்ட ஆய்வாளராக அவர் படைப்புக்கள் மீது எனது ஆர்வத்தை அதிகரித்தது. தொடர்ச்சியாக Tamil Diaspora குறித்த எனது ஆய்வை முன்னெடுத்துச் செல்ல உதவிய அவரது சந்திப்புக்கள் ஒரு அப்பா - மகள் உறவாக அழகாகப் பரிணமித்தது. 'மகள்' என்கின்ற அந்த விளித்தலை இனிக் கேட்க இயலாது என்கின்ற இடிச்செய்தி நவம்பர் 26ம் திகதி என்னச் சேர்ந்தது. 

      தேசியத் தலைவர் பிரபாகரனது பிறந்தநாளான மாவீரர் தினத்தன்று எஸ்.பொ. மறைந்ததிலும் ஒரு பெருமிதமுண்டு - மித்ர என்கின்ற எஸ்.பொவின் மகன் கேப்டன் அர்ஜீனாகக் கடற்போரில் தன்னை ஈந்த ஒரு மாவீரன் என்பதே அது!

      தமிழச்சி எனும் புனைப்பெயரில் எனது எஞ்சோட்டுப்பெண் கவிதைத் தொகுப்பினை தான் முன்னெடுத்த தமிழிலக்கியம் 2004 எனும் மூன்று நாள் இலக்கியக் கருத்தரங்கில் அவர் அறிமுகம் செய்தார். எஸ்.பொவின் மூத்த மகன் (ஆஸ்திரேலியா வாழ் மருத்துவர்) அநுர அண்ணனது ஆதரவான பங்களிப்புடன் சென்னையில் நடந்த அந்த கருத்தரங்கில் கல்கியின் தற்பொழுதைய ஆசிரியர், தமிழின் சிறுகதைத் தளத்தில் இயங்கிவருகின்ற திரு.வெங்கடேஷூடன் இணைந்து ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய இனிய அனுபவம் எனக்கு வாய்த்தது. 

      ஈழத்தின் டொமினிக் ஜீவா முதல் புலம்பெயர்ந்து வாழுகின்ற பல முக்கியமான படைப்பாளிகளுடன், கோவை ஞானி, இந்திரா பார்த்தசாரதி, திருப்பூர் கிருஷ்ணன் முதலான தமிழகத்தின் மூத்த இலக்கியவாதிகளும், தமிழகத்தின் இளையதலைமுறை படைப்பாளிகளுமாய்க் கலந்துகொண்ட அந்த மூன்று நாள் திருவிழாவில் நான் கற்றுக் கொண்டதும் - பெற்றுக் கொண்டதும் ஏராளம். வாசகர் வட்டம் மூலம் சிறந்த புத்தகங்களை வெளியிட்ட முதுபெரும் அம்மா லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியினைச் சந்திக்கும் வாய்ப்பும் அங்குதான் கிட்டியது. கவிஞர் சச்சிதானந்தம் அவர்கள் துவங்கி வைக்க, மூன்று தினங்களும் அறிவுத் திருவிழாதான். இன்னொரு ஏதோ என்ற நாடகத்தை நானும், கனடாவின் சிறுகதை எழுத்தாளர் சிறீசுக்கந்தராசாவும் அரங்க நிகழ்வாக நிகழ்த்த, நிறைவாகப் பரதநாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜன் பாரதிதாசன் பாடல்களை அபிநயித்தார்!
குறிப்பிடத்தகுந்த நிகழ்வாகப், புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களின் ஐம்பதிற்கும் மேற்பட்ட புத்தகங்களும், தமிழகத்தின் இளைய படைப்பாளிகள் சிலரது முதற் தொகுப்புக்களும் வெளியிடப்பட்டன. தனது மித்ர பதிப்பகத்தின் களப்பணியில் இந்நிகழ்வு ஒரு முக்கியமான கட்டமென அன்று அவர் நெகிழ்ந்து என்னை உச்சிமுகர்ந்தார். எனக்கும் எனது இலக்கியவாழ்வின் மறக்கமுடியாததொரு பயிற்சிப் பட்டறையாய் அந்நிகழ்வு இன்றுவரை இனிக்கின்றது. 
எஸ்.பொ. அன்று எனக்களித்த அந்த முன்நெற்றி முத்தத்தின் ஈரத்தை ஆஸ்திரேலியாவின் பனித்துளியொன்றில் அவருக்கு அஞ்சலி செலுத்தப் பொதிந்து அனுப்ப ஆசை! ஆனால் அங்கே பனியெல்லாம் இப்போது யாழ்ப் பனையின் கண்ணீரல்லவா? 

 

எஸ்.பொ: வரலாறாய் வாழ்வார்

 

                "தமிழ்நாட்டில் பாரதியிடமிருந்துதான் மனிதன் தொடங்குகிறான்" என்று வலம்புரிஜான் சொன்னது போல எனக்கு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வம் எஸ்.பொவின் அறிமுகத்திற்குப் பின்பே தொடங்கியது. ஈழத்து மண்ணில் உதித்து, தமிழ் இலக்கியத் தளத்தில் அழியாத் தடம் பதித்த படைப்பாளி எஸ்.பொன்னுத்துரை எனும் எஸ்.பொ வின் மரணம் எனக்குப் பெருந்துயரம். காரணம் - அவரை 'அப்பா' என்றே நான் எண்ணியதும், அவ்வாறே அழைத்ததும்.
இழப்பிலும் ஒரு பெருமிதம் - தேசியத் தலைவர் பிரபாகரனது பிறந்த நாளான நவம்பர் 26ம் திகதி - மாவீரர் தினத்தில் அவர் மறைந்தது. அவரது அன்பு மகன் மித்ரா, அர்ஜீனா எனும் பெயர் தாங்கிக் கடல்புலியான மாவீரன். எஸ்.பொ மாவீரர் தினத்தன்று மறைந்தது எவ்வளவு பொருத்தம்! 

      அவருக்கும் எனக்குமான அறிமுகம் நிகழ்ந்தது 2002ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை நடத்திய ஒரு பன்னாட்டு மொழிபெயர்ப்புக் கருத்தரங்கத்தில். பிரபஞ்சனின் மரி எனும் ஆட்டுக்குட்டி என்ற சிறுகதையினையும், ஈழத்துத் தமிழ் எழுத்தாளரான அருண் விஜயராணியின் சிறுகதை ஒன்றையும் மொழிபெயர்த்து, அதனை அடியொட்டி நான் வாசித்த கட்டுரை அவருக்குப் பிடித்திருந்தது. புலம் பெயர்ந்து வாழுகின்ற ஈழத் தமிழர்களது இலக்கிய வெளிப்பாடு 'வெறும் புலம்பல்' என்று எழுத்தாளர் சுஜாதா கூறியதைக் கடுமையாக மறுத்து அது புலம்பல் இலக்கியமல்ல - 'புகலிட இலக்கியம்' என அவர் வாதித்தது என்னைக் கவர்ந்தது.
      அன்று துவங்கிய அவர் குறித்தான தேடல், எஸ்.பொ, ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமல்ல, தமிழ் இலக்கியத் தளத்திலும் மிகத் தரமானதொரு தடம் பதித்திருக்கின்ற முக்கியமான படைப்பாளி என்கிற புரிதலையும், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களது அலைந்துழல்வும் எதிர்ப்பு இலக்கியமும் எனும் தலைப்பில் எனது முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள உந்துதலையும் தந்தது. எனது முதல் தொகுப்பான எஞ்சோட்டுப் பெண் வெளிவருவதற்கு முழு காரணமும் எஸ்.பொ தான். 
எஸ்.பொ ஒரு காட்டு மனிதர். இறுதிவரை அவ்வாறே வாழ்ந்தவர். தமிழ்த்துவம், இனத்தின் மேன்மை, தமிழ்த் தேசியம் - இவையே அவரது அடிநாதமென்றாலும், "மானுஷீகத்தின் தேடலைத் தன் எழுத்தின் தவமாகவும், உண்மையினை மதமாகவும்" கொண்டவர். சமரசமற்ற போராளிப் படைப்பிலக்கியவாதி. ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பு, தமிழ் இலக்கியப் பங்களிப்பின் பின்னால் அமர்ந்து, மேட்டிலிருந்து 'free wheel' செய்கின்ற மிதிவண்டி ஒட்டமல்ல, தனக்கெனத் தனித்துவ அடையாளமாக மொழி வளத்தையும் கொண்டது என்பதைத் தம் படைப்புக்கள், பேச்சுக்கள் வாயிலாக உறுதிப்படுத்தியவர்.
      தனது அத்தனை பலவீனங்களையும் நேர்மையாகத் திரைகளின்றிப் படைப்புகளில் முன்வைத்தவர். ஒரு படைப்பாளியும், மனிதனும் வேறல்ல - அவனது இலக்கிய ரூபமும், தனிமனித வாழ்வும் ஒன்றே என நம்பி அதன்படியே வாழ்ந்தவர். ஊருக்கு ரண சிகிச்சை செய்ய ஓராயிரம் வைத்தியர்களுண்டு. ஆனால், தன் படைப்புக்களில், தன் சீழ்கீறி, தனக்குத்தானே ரண சிகிச்சை செய்த 'ஆண்மை' ஒரு எஸ்.பொ விற்கே உண்டு.

      திராவிட இயக்கம் மீது பற்றுக் கொண்டவரென்றாலும் திராவிடக் கட்சிகள் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர். கவிஞர்களுக்கு அளிக்கப்படுகின்ற அடைமொழிப் பட்டங்களை வெளிப்படையாகச் சாடியவர். தமிழ்த் திரைப்படச் சூழல், பாடல்கள், படைப்புக்கள் குறித்தும் தமது விமர்சனத்தைத் தொடர்ந்து முன்வைத்தவர். 'வெளவால் இனமென' யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தைச் சாடியவர். ஆறுமுக நாவலரைப் பெரிதும் மதித்தாலும் அவரை, அவரது சமயச் சார்பிற்காகக் கடுமையாக விமர்சித்தவர். ஈழத்தில் முற்போக்கு இலக்கியத்திற்கு எதிராக 'நற்போக்கு' என்கிற பதத்தை முன்னெடுத்தவர். நமது முதுபெரும் இலக்கியகர்த்தா அய்யா ஜெயகாந்தன் எஸ்.பொ வின் நண்பர். அவரது படைப்பின் விசிறி இவரென்றாலும் யாராவது அவரை 'ஈழத்து ஜெயகாந்தன்' என அழைத்தால் கடுங்கோபம் கொள்பவர். புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம், ஒரு Catharsis விளைவிற்காய் எழுதப்படுவதல்ல. புதிய தேடலை நோக்கிப், பல புதிய தளங்களில் தமிழ் இலக்கியத்தை அது எடுத்துச் செல்லும் என உரக்க அறிவித்தவர்.
மிக முக்கியமாக, ஈழமண்ணில் பிறந்து, சூழலின் காரணமாகத் தன் குடும்பம் ஆஸ்திரேலியாவிற்குக் குடி பெயர்ந்தாலும், தனது வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழகத்தில் கழித்தவர். தமிழ்நாடே தனது ஆதித்தாய் என நம் மண் மீது பேரன்பு கொண்டவர். 
      அவரது வாழ்க்கை, இலக்கிய நுகர்வு, மதிப்பீடுகள், ஆராதனைகள், விழுமியங்கள், இன-மொழி அக்கறைகள், அறிவிற்கும் மேற்பட்டதான தர்ம, நியாய மார்க்சியக் கோட்பாடு, மரபின் அச்சிலேயே புதுமை புகுத்தி அதனை மீறும் துணிச்சல், சமரசமற்ற எழுத்துப் பணி, ஒளிவுமறைவற்ற திறந்த புத்தகமெனத் தன்னை ஒப்புக்கொடுத்தல் - இவையெல்லாம் எஸ்.பொ வை ஒரு Cultural Institution என்றே நிலைநிறுத்தும்.

                "Why should we be owls, when we can be eagles? Why be teased with nice - eyed wag tails, when we have in sight the cherub - contemplation?" எனும் கீட்ஸியப் பிடிவாதத்துடன் நான் காண்கின்ற எஸ்.பொ எப்பொழுதுமே காலவெளிதனில் மிகக் கம்பீரமாகப் பறக்கின்ற கழுகுதான். 
                Yes, he is an Eagle!

                "Be it in the Nest 

                Or on the wings."