Dr. Thamizhachi Thangapandian

Thangapandian Illam,
Raja Nagar, Neelangarai,
Chennai – 600 041.

கவிஞர் தமிழச்சியின் ஒரு விமர்சனம்

- மா.அரங்கநாதன்

தமிழ் புத்தக நண்பர்கள் சங்க சார்பில் TAG WORLD அரங்கில் ஒவ்வொரு மாதமும் இலக்கிய படைப்பு ஒன்று பற்றி அந்த இலக்கியப் படைப்பாளியையும் அழைத்து விமர்சனக் கூட்டம் நடத்துகின்றனர். சென்ற மாதம்(24.2.2015) எனது “காளியூட்டு” நாவல் கவிஞர் தமிழச்சி அவர்களால் விமர்சனம் செய்யப்பட்டது. படைப்பாளிகள் இந்திரா பார்த்தசாரதி, ரவி சுப்ரமணியம், சுஜாதா நடராஜன் போன்றோர்  வந்திருந்தனர். ரவி தமிழ்வாணன் -  சாருகேசி ஆகியோர் அவ்வமைப்பு பற்றி எடுத்துரைத்தனர்.

எனது பள்ளி நாட்களில் தமிழ்வாணன் அவர்களின் கல்கண்டு இதழில் நான் எழுதிய “கோபுவின் கதை” பற்றி திரு ரவி தமிழ்வாணன் குறிப்பிட்டது ரசிக்கும்படி இருந்தது.

கவிஞர் தமிழச்சி அவர்களது கட்டுரை விஸ்தாரமான கருத்துக்களையும் விவரங்களையும் கொண்டிருந்தது. அந்த கட்டுரை பற்றி விவரித்தே வேறொரு கட்டுரை எழுதும் அளவிற்கு ஆழம். தமிழில் மட்டுமல்ல - பொதுவாக இலக்கியவாதிகள் விமர்சகர்களாக இருப்பதில்லை. உணர்ச்சி வசப்பட்டவர்களாக அவர்கள் இருப்பதே அதன் முதற் காரணம். பாரதியும் பாரதிதாசனும் “உலகக் கவிஞர்கள்”, எனினும் அவர்களது விமர்சனங்கள் - குறிப்பாக கவிதை பற்றிய - மிகவும் சாதாரண பண்டிதரின்  பாணியிலேயே  இருக்கின்றன. இதை ஒரு குறையென்றும் சொல்ல முடியாது,  உலகமெங்கிலும் அப்படித்தான். அறிவுலகிலும் படைப்புலகிலும் ஒருசேர வந்து திளைக்கின்ற தகைமை எல்லாரிடத்தும் இருப்பது கிடையாது. எல்லாரும் வள்ளுவராகி விட முடியாது.

ஐரோப்பிய இலக்கியத்திலும் எலியட், பவுண்ட் போன்றோரும் தமிழில் க.நா.சு, செல்லப்பா, சண்முகசுந்தரம், தருமு சிவராமு, ஞானக்கூத்தன் போன்றோரையும் எனக்கு தெரிந்தவரை, சொல்ல முடியும். புதுமைபித்தன் விமர்சனத்தில் அதிக நாட்டம் காட்டவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர் கவனம் முழுவதும் படைப்பிலேயே இருந்ததால் தான். நல்ல காலம் பலர் தப்பினார்கள்.

மேலே குறிப்பிட்ட விமர்சன படைப்பாளிகள் (க.நா.சு போன்ற) குழுவிலே கவிஞர் தமிழச்சியும் இணைகிறார்.

உணர்விற்கு மொழியில்லை. பெற்ற உணர்வை தாய் மொழியில் சொல்வது கூட ஒரு வகை மொழி பெயர்ப்புத்தான். இந்த நிலையில் கவிதை ஒன்று தான் வித்தியாசமாக வெளியாகின்றது.

குறிஞ்சி நிலத்தில் அன்று நம் மூதாதையர் தேனைப் பருகுகிற பறவையை கண்ணுற்று அடைகிற ஆனந்தமும்,  இப்போது  மவுண்ட் ரோடு நடைபாதையில் வீசப்பட்ட இட்டிலியை பிய்த்துண்ணும் குழந்தையை நோக்கி தாய் அடையும் ஆனந்தமும் ஒன்றல்லவா? தேனையும், பாலையும், இட்டிலியையும், மவுண்ட் ரோடையும் போன்றதா மகிழ்ச்சி என்னும் உணர்வு? இல்லையே! நமது மண்ணைக்கொண்டு  உலகை உணரவேண்டிய  நிலையில் இருப்பதும் இதுதானே. இதற்கு தமிழச்சி அவர்களின் கட்டுரையே சான்று. 

மேநாட்டு படைப்பாளிகளை குறிப்பிட்டுச் சொல்வதன் மூலம் இந்த மண்ணின் மாண்பு தெரியச் செய்கிறார். படிப்பதற்கு சிரமமானது என்று கருதப்படும் ஹென்றி ஜேம்ஸ் போன்றோரைச் சொல்வதன் மூலம்  உலகு சார்ந்த இலக்கியவாதிகள் பற்றிய விமர்சனங்களையும் நம்முன் கொண்டு வருகின்றார்.

எத்தனை பிரசித்திப்பெற்ற படைப்பாளிகளைச் சொல்லி இருப்பினும், வந்து சேரவேண்டிய இடம் வனப்பேச்சியும் அருவா கருப்பனும் தான்.

கவிஞர் தமிழச்சியின்  கவிதைகளைப் படித்து எங்கோ சென்று நிற்கையில் என் முன்னே எங்களூர் கிழவி கம்பு ஊன்றிக் கொண்டே இழவு வீட்டில் துக்கம் விசாரிக்க வந்த நினைவு எழுந்து நின்றது. அவள் திரும்புகையில் "ஆச்சி கொஞ்சம் காப்பித்தண்ணி குடிச்சிட்டு போயேன்!" என்று பேத்தி முறைச் சிறுமி சொல்ல, "இந்த பாழும் வயித்துக்கு, இது ஒரு கேடா?" என்று நெஞ்சை தடவிக்கொண்டே திரும்பும் காட்சி அப்படியே வந்து நின்றது.

அந்தக் காட்சி என்முன் தோன்ற காரணமாயிருந்த அந்த கவிதை வரிகள்!

இந்த

அவலத்திற்கு பின்பும்

அடுத்த வேளை

சாப்பாட்டை சாப்பிடத்தான்

வேண்டியுள்ளது.

ஈழத்தில் எம்மக்கள் தம் மண்ணில் எல்லாமிழந்து நிற்க, அதைப்பார்த்த பின்னர், படித்த பின்னர் என்ன செய்ய முடியும்? என்ன செய்து விட்டோம்?

தமிழச்சியின் மேற்படி கவிதை வரிகள் இம்மண்ணில் தானே தோன்றியிருக்க முடியும் - நம்மோடு சேர்ந்து அழ ஒருவர் உண்டு என்ற எண்ணம் இழவு வீட்டில் கூட ஒரு ஆறுதலைத் தருகிறது.

பி.கு.

அந்தக் கூட்டத்தில், கடைசியில் நான் பேசுகையில் கவிஞர் தமிழச்சி அவர்கள் படித்த கட்டுரை பற்றி எதுவும் சொல்லவில்லை. அதற்கு எனது இடது காது தான் காரணம்.