Dr. Thamizhachi Thangapandian

Thangapandian Illam,
Raja Nagar, Neelangarai,
Chennai – 600 041.

பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி - மனோ மோகனின் கவிதைகளை  முன்வைத்து ஒரு உரையாடல் - தமிழச்சி

          'ஒரு பைத்தியக்காரனுக்கும் எனக்கும் உள்ள ஒரே வேறுபாடு நான் என் சித்தப்பிரமையை அறிந்தே இருக்கிறேன் அது கொடுமையை இன்னும் அதிகமாகத்தான் வைத்திருக்கிறது. நான் தரிசித்ததனை ஒருபோதும் அப்படியே சொல்ல முடியாது, சும்மா இருக்கவே முடியாது, வெளிப்பட்டே தீர்கிறது வெறி' என்கிறார்.

          "உர்-பாசிசம் (நித்திய பாசிசம் என்றும் பொருள்) நம்மைச் சுற்றிலும் இன்றும் இருக்கிறது; சில நேரங்களில் சாதாரண உடைகளில். எவராவது 'ஆஸ்விட்ச்சை மீண்டும் திறக்க வேண்டும். இத்தாலிய சதுக்கங்களில் கருப்புச்சட்டைகள் பேரணி நடத்த வேண்டும்' என்று சொன்னால், நமது சிக்கல் எளிதாகிவிடும். வாழ்க்கை அத்தனை எளிதானதல்ல. உர்-பாசிசம் எந்த அப்பாவித்தனமான உருவிலும் மீண்டும் வரலாம். உலகின் எல்லா மூலைகளிலும் தினசரி அது எடுக்கும் புதுப்புது அவதாரங்களைச் சுட்டிக் காட்டுவது நம் கடமை", என்கிறார் உம்பர்தோ ஈக்கோ, (உர் -பாசிசம்' (Ur-Fascism), நியுயார்க் ரிவியூ ஆஃப் புக்ஸ், 22.6.1995).

         "மோலியரின் லெ பூர்ஷ்வா ஜென்டில்ஹோம் என்ற நாடகத்தில் யோர்தான் என்ற மனிதர் 'நான் வாழ்க்கையில் இதுவரை உரைநடையா பேசிக்கொண்டிருந்தேன்' என்று ஆச்சர்யமடைகிறார். அதுபோல ஒருவகையான கவிதை மொழியிலேதான் நாமும் வாழ்நாள் முழுவதும் பேசுகிறோம் என்பதை அறிந்தால் நாமும் ஆச்சர்யம் அடைவோம். பலத்த மழை - நனைந்து வருகின்ற நண்பரைப் பார்த்து வீட்டிலிருக்கின்ற நண்பர்" அடடா, கொஞ்சம் நனைந்து விட்டாய் போலிருக்கே" என்கிறார் - முழுக்க நனைந்தவரைப் பார்த்து கொஞ்சம் நனைந்து விட்டாய் என்பது குறைநவிற்சி (under statement). பதிலுக்கு அந்த நனைந்த நண்பர் - "கொஞ்சமா? வானம் கூரையைப் பொத்துக் கொண்டு கொட்டுகிறது" என்று சொல்வது இல்பொருள். அதோடு, "நான் ஊறுகாய் போல் ஆகிவிட்டேன்" என்பது உவமையணி - இப்படித்தான் வாழ்க்கையில் அணிசார்ந்த மொழியைப் பேசிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் க. பூரணச்சந்திரன். கவிதை அல்லது கலைகளின் பிற வடிவங்களில் இந்த அணிசார்ந்த, நேர் அர்த்தத்திலிருந்து விலகுதல் நமக்கு இன்னும் சற்று கூர்மையாகச் சாத்யப்படலாம் என அங்கு நுழைந்தால், இந்தச் "சொல்லணி அல்லது விலகல் எதிலிருந்து விலகிப் போகின்றதோ அந்தச் சாதாரண, நேர் அர்த்தம் என்ற கருத்தையே அது கேள்விக்குள்ளாக்குகிறது" என்கின்ற அவர், சான்றாக, டெரிடா "உருவகம் குறித்த கோட்பாடு விளக்கங்கள் யாவும் தவிர்க்கவியலாத வகையில் உருவகங்களையே சார்ந்திருப்பதைச்" சுட்டிக்காட்டுகிறார். அடிப்படையிலேயே மொழி என்பது ஒன்றைச் சொல்லி மற்றொன்றை உய்த்துணர வைக்கும் குறியீட்டு இயல்பு கொண்டதுதானே? இந்தப் பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி என்பது எனக்கு ஒரு குறியீட்டு படிம உருவகம் தான் -அது வெறும் உவமையல்ல. தலைப்பே மிக நீண்ட உரையாடல்களை எனக்குள் நிகழ்த்துகின்றது.

உத்திநோக்கில் கலை (ஆர்ட் ஆஸ் டெக்னிக்) என்ற நூலில் அவர், 'பழக்கவயப்படுதல் பொருட்களை, உடைகளை, மரச்சாமான்களை, ஒருவரது மனைவியை, போரின் பயத்தை - யாவற்றையும் விழுங்கி விடுகிறது. பல்வகை மனிதர்களின் சிக்கல்மய வாழ்க்கைகளும் நனவற்றநிலையில் செல்வதாக இருப்பின், அவை இருந்தும் இல்லாததுபோல்தான். வாழ்க்கையின் உணர்வை மீண்டும் பெற உதவுவதற்காகத்தான் கலை இருக்கிறது. பொருட்களை நாம் உணரவும், கல்லைக் கல் தன்மையுடையதாக ஆக்கவும் அது இருக்கிறது. கலையின் இறுதிப்பணி, பொருட்களைப் பற்றி நாம் வைத்திருக்கும் கருத்துகளை அல்ல - அவை எப்படியிருக்கின்றனவோ அப்படி உணரவைப்பது. இதற்குக் கலை கையாளும் உத்தி, பொருட்களைப் பரிச்சயமற்றதாகச் செய்வது - அவற்றின் வடிவங்களைச் சற்றே இருண்மைப்படுத்தி, நாம் அவற்றை உணர்தலாகிய செயலைக் கடினமாக்குவதும், நீண்டநேரம் கொள்ளச்செய்வதுமாகும். கலையில் அது உருவாக்கப்படும் நிகழ்முறைகள் முக்கியமே ஓழிய இறுதிப்படைப்பு அல்ல. ஒரு பொருளின் கலைத்தன்மையை அனுபவப்படுத்தும் வழி தான் கலை. அப்பொருள் முக்கியமன்று' என்று சொல்கிறார். அதாவது ஒரு பொருளை நமக்கு முற்றிலும் பரிச்சயமற்றதாகத் தோன்றச் செய்வதுதான் பரிச்சயநீக்கம் என்னும் உத்தி. இந்த உத்திக்கு இன்னொரு பெயர்தான் கலை, பரிச்சயநீக்கம் என்பது என்றும் மாறாத ஒற்றைத் தன்மை கொண்ட ஒரு செயல்முறை அல்ல. எந்தெந்த நேரங்களில், எந்த எந்த முறைகளில் பரிச்சய நீக்கம் செய்ய முடியுமோ அவற்றைக் கலை கையாளவேண்டும். இதனை மென்மேலும் செப்பமாக்கியவர் பக்தின். அவரது பார்வையில் மொழியின் குறிகள் மிக முக்கியம். சொற்கள் என்பன நிலையான அர்த்தம் பெற்றவை அல்ல பக்தினுக்கு. அவை சமூகத்தின் பல்வேறு தளங்களில் காணப்படும் பல்வேறு தன்மைகளும், போராட்டங்களும் நிரம்பியவை. It's a polyphony என்று மொழியை அதனாலாயே அவர் சுட்டினார்" (க. பூரணச்சந்திரன்). சொற்கள் போரிடும் கருத்தியல்களின் செயல் தளங்கள் என்ற பக்தினின் கூற்றுப்படி பார்த்தால் பைத்தியக்காரியும், பட்டாம்பூச்சியும் அப்படித்தான். அவற்றை defamiliarize செய்து, பழக்கவயப்படுதலின் தளை நீக்கி, அவற்றைப் பற்றிய நம் கருத்துக்களை அல்ல - அவை எப்படியிருக்கின்றனவோ அப்படி உணர வைப்பதுதான் மனோவின் இந்தத் தலைப்புத் தேர்வு.

     பயித்தியக்காரியின் பெண் மொழியும், சமிக்ஞைகளும், உடல் மொழியும், இச்சைகளும், வலியும், துயரமும், கருணையும், தாய்மையையும் சொல்வதே நம் தமிழின் நாட்டார், செவ்வியல் மரபு.

     முப்போகம் -
     விளைச்சலைப் போகமெனச்
     சொல்லும் மொழி
     பெண்ணாகியிருப்பதன்றி
     வேறு நிலையில்லை"”

     "பட்டாம்பூச்சியான பெண் மீன்
     நதியின் எல்லை கடந்து பறப்பது
     தக்கை ஆடும் தருணத்தை
     எதிர்நோக்கும் தூண்டில்காரனுக்கு
     ஆற்று நீரில் மிச்சமிருப்பது
     நீர்வெளியில் துள்ளும் பெண் மீன்
     பட்டாம் பூச்சியாவது பற்றிய
     கதைகள் மட்டுமே"

     "எந்தவொரு சொல்லும் தனக்கான எல்லைக்குள் நின்று
     ஒரு பொருளை உணர்த்துவதில்லை
     எனக்கான சொல் அசைவுகளில் உருவகங்களைச் செய்கிறேன்...
     சொல்லற என்பதே எனது அறம்"

மொழியில் வாழ்தலும், மொழிச் சலவையும்) அதன் தொடர்ச்சியாக இங்கு இணைந்து கொண்டிருக்கிறார் மனோமோகன்.
    நகுலனுக்கு மஞ்சள் பூனை, வான்கோவிற்கு சுடரும் மஞ்சள் மலர் ஓவியம், நா.பிச்சமூர்த்திக்குக் பஞ்சமகாகவிஞன் (கரிச்சான், வானம்பாடி, குயில், மணிப்புறா, மைனா), யவனிகாவிற்கு கருப்பு பியர், ரமேஷிற்குப் பன்றிக்குட்டி போல மனோவிற்கு பட்டாம்பூச்சி.

     "கருடன் பார்த்து வெகு காலமாகிறது
     எப்போதேனும் வலசை போகின்றன நாரைகள்
     முயலும் காட்டுப் பூனையும் பிடித்து
     விற்றுப்போன பழைய குறவன்
     பிச்சை எடுக்க வேணும் வந்து போகிறான்
     ...... அவனது ஞாபகத்திலும்
     எமது திணை நிலத்தின்
     பச்சய வாசனை" (புதைவெளி)

     "சற்றுமுன் பிடித்த
     வண்ணத்துப் பூச்சியைத் தவிர"

     கவிதைக்கான சொல்தேர்வு எங்கிருந்து தொடங்குகிறது எனக் கேட்கின்ற பொதியவெற்பன்,

     ஒரு மொழியில் கவிதைக்கான சொல் தேர்வு
     பயின்று வந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
     இந்தப் பறவைக்குப் பெயரிடுவதன் மூலம்
     எனது மொழிக்கு ஒரு கிவதையைக் கொண்டு வருகிறேன்"

     'போதையின் நிறம் காவி
     கவிதையின் மணம் பழம்
     காவி நிறப் பழம் -
     இது புத்தனுக்கு என் மகள் இட்ட பெயர்'

     சட்டைப் பையில் மாத்திரை - இது
     மனோ உறக்கத்திற்கு இட்ட பெயர்.
     கூழாங்கல் - இது மனோவிற்கு சிமென்ட் ஓடுகளில்
     பெய்யும் மழை.
     நிலா ஊறுகாய் - மனோவிற்கு side dish

     "ஓவ்வொரு வண்ணத்துப்பூச்சியைக் கையளிக்கும் போதும்
     ஒவ்வொரு முறை நிகழ்கிறது அவனது மரணம்
     பட்டாம் பூச்சியின்
     மூன்றாம் சிறகசைப்பில் உயிர்தெழும்போது
     சிலுவை சிறகு விரித்த பட்டாம் பூச்சியென
     விண்ணேகுகிறது" (பட்டாம் பூச்சி மேய்ப்பவன்)

                "வரலாற்றாளன் ஒரு நிகழ்வின் விளைவுகளைக் கையாள வேண்டியவன் ஆகின்றான். ஒரு கலைஞனோ நிகழ்வின் உண்மைகளைக் கையாள வேண்டியவன் ஆகிறான்" எனும் Leo Tolstoy இன் கூற்றை மெய்ப்பித்த எனக்கு மிகப் பிடித்த கவிதை இது!"

     நம்பமுடியாதபோதும்கூட
     அது அப்படித்தான் நடந்தது
     அப்பழுக்கற்ற உனது வெள்ளை அங்கியின் மீது
     குருதியின் ஈரம் பரவிக்கொண்டிருந்தது
     சற்றுமுன் சுடப்பட்ட தோட்டா
     உனது இடதுபுற மார்பில் சற்று மேலேயோ
     சரியாக மார்புக் காம்பிலோ பட்டிருக்க வேண்டும்
     முப்பதாவது வினாடியே உயிர் பிரிந்தது
     சுட்டவனுக்கு அசலாக எனது முகம்
     ஆனாலும் அது நானில்லை
     என்பதை எப்படி உன்னிடம் சொல்வது
     அதுவும் இறந்துவிட்ட உன்னிடம்
     இனி அந்த சிலுவைக்கு
     நீ உபயோகப்பட மாட்டாய்
     அந்த ஆணிகளுக்கும் கூடத்தான்
     கொண்டுவந்த சிலுவையையும் ஆணியையும்
     திரும்ப எடுத்துப் போவதில்
     சரத் பொன்சேகாவுக்கு உடன்பாடில்லை
     கிடத்தப்பட்ட சிலுவையில்
     உனக்குப் பதிலாக என்னைக் கிடத்தினான்
     ஆணியடித்துக் நிமிர்த்தப்பட்ட எனக்கு
     அசலாக உனது முகம்.

         "டேவிட் கூப்பரின் பைத்தியம் (அ) சித்தப்பிரமை என்பதும் அறிதலுக்கான வழி. இந்த எதிர் உளவியல் ரீதியில் நகுலன் எழுத்தில் நதி மூலம் காண்பார் சா. தேவதாஸ்.

       மனோவின் சிறு நீர் கழித்தல், மது, சிறுநீர், கொலை, கலவி, ஆகிய குறியீடுகளுடன் சிதைவை, நகுலனது தன்னிலிருந்து தான் தப்பித்தலை, பிரம்மராஜன் சுட்டுகின்ற T.S. Elliotன் சுயமற்ற நிலையை (impersonality) ஐச் சுட்டுகின்ற ஒரு கவிதை.

     துயரமென்பது வேறொன்றுமில்லை
     அதுவொரு பீர்பாட்டில் அவ்வளவுதான்
     நாவில் கசப்பேற அதைப் பருக நேரும்போது
     இரண்டுமுறை சிறுநீர் கழிப்பது நல்லதென
     கிளிப்பாணி ஜோதிடன் சொல்லியிருந்தான்
     சிறுநீர் கழித்ததற்காக
     பதிமூன்று லட்சத்து முப்பத்து ஓராயிரத்து
     தொள்ளாயிரத்து எண்பத்திரண்டாவது முறையாக
     நீ என்னைக் கடிந்து கொண்டபோது
     உன்னைக் கொல்ல வழியறியாது துயருற்றேன்
     என் ஆகச்சிறந்த துயரம் நீதான் தெரியுமா
     அதனால் தான் உன்னை
     முத்தமிட்டு இதழ் பருகும்
     ஒவ்வொரு தடவையும் சிறுநீர் கழிக்கிறேன்
     துயருறும்போது வாடிக்கையாகிவிடுகிறது
     நீ கவிதை எழுதும் நான் சிறுநீர் கழிப்பதும்
     இரண்டிற்கும் பெரிதாய் வேறுபாடில்லை.

        "மனித குல வரலாறு பல்வேறு வாழ்தல் முறைகளைக் கடந்து வந்துவிட்டது. பின்-நவீனத்துவம் என்பதுவும் அத்தகையதொரு வாழ்தல் முறைதான் என்பதை நாம் நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். தமிழ்ச்சூழல், மேற்கத்திய உலகம் தரும் கருத்து மற்றும் சிந்தனைகளைப் பெரும்பாலும் திறனாய்வுக் கோட்பாடுகளாக மாற்றிக் கொள்வதும், கலை இலக்கியத்தளங்களுக்குள் சுருக்கிக் கொள்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. பின் நவீனத்துவமும் அத்தகைய நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பின் நவீனத்தின் அடிப்படைகள் திறனாய்வுக்குள் மட்டும் அடங்கி விடுவன அல்ல. அது ஒரு வாழ்தல் முறை. அந்த வாழ்தல் முறை சரியான வாழ்தல் முறையா? தவறான வாழ்தல் முறையா? எனக் கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் வாழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் பதிலாகச் சொல்ல முடியும். நான் மட்டும் அல்ல ஒவ்வொருவரும் வாழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் அதற்கான பதில்".
நகுலனும், மனோவும், ரமேசும், நானும் வாழ்கின்ற இவ்வாழ்வில் யவனிகாவும் இருக்கிறார் தன் திருடர்களின் சந்தையோடு.

     நிதானம் வேண்டித்தான்"

         யவனிகாவின் கடவுளின் நிறுவனத்தை முன்வைத்து குலசேகரன் சொன்னதாகப் பொதியவெற்பன் பதிகிறார் - "குடியும் கூட விடுபடுதலின் அம்சமாகிறது - மது பற்றிய குறிப்புக்கள் பிரக்கைஞ நிலையென்றால், குடித்தல் மறத்தலையும் சிதைத்தலையும் கொண்டாடுவதாகிறது. இந்தக் கவிதைகளில் போதைக்குணமும் மனச்சிதைவும் அருகருகே வைக்கப்படுகின்றா. குடியும் பயித்தியமும் ஒன்றாகிறது"

     "துயரமென்பது வேறொன்றுமில்லை
     அதுவொரு பீர் பாட்டில் அவ்வளவுதான்"
      "வழிவதும் பொங்குவதுமான
     அருவியைப் போலவே சலசலக்கிற
     மது விடுதி"
     "மதுகாலியாகும கணத்தில்
     கதைகளால் நிறைந்து விடுகிறது கோப்பை"

     "பசி மிகும் போது
     தானின்ற குட்டிகளையே புசிக்கும்
     நாகமொரு அரசியல் விலங்கு

     ரோஜாவின் பெயர் கொண்ட
     உம்பர்டோ ஈகோவின் நாவலை
     வாசித்து முடித்த இரவில்
     ஒரு பின் நவீனக் கவிஞன் சொன்னான்
     வரலாறென்பது நஞ்சு தடவப்பட்ட காகிதம்"

                "சிதைவுண்ட தன்மைக்கு நவீனத்துவம் வருத்தம் கொள்கிறது. பின்நவீனத்துவமோ கொண்டாட்டம் கொள்கிறது" என்பது அ. ராமசாமியின் மிக முக்கியமான அவதானிப்பு.

     என்று கேட்டாள்
     ஏன் இப்படி வாழ்கிறீர்கள்
     என்று நான் கேட்கவில்லை
     உங்கள் வாழ்விற்கும்
     என் சாவுக்கும் இடையில்

நகுலனின் இக்கொண்டாட்ட மனநிலையை மனோவிடத்திலும் பார்க்கலாம்.

     கலவியைப் போலவே அலாதியானது கனவு"

      "அவன் என் எதிரி என்றார்கள்
     அவனைச் சுட்டுவிட்டேன்
     ஆனால் பாவம்
     அவனை நான் சாதாரணமாகச் சந்திருந்தால்
     ஒரு கப் பியர் வாங்கி அவனுக்களித்து
     இருவருமே சந்தோஷமாகக் குடித்திருப்போம்
     ஆனால் பாவம்
     அவன் என் நண்பன்போலவே இருந்தான்".

பீர்பாட்டில்

மொழியின் துல்லியம் கொண்ட மனோவின் சில உவமைகள் புதுவிதக் கருத்தமைவு கொண்டுள்ளன. என்னை அவை மிகவும் கவர்ந்தன.

     என் மார்புக் கூட்டுக்குள் நுழைகிறது
     உனது துரோகம்"

     "இடைவேளையில் வெளியேறிய ஆதிபராசக்தி
     நீதிமன்றத்தை நிமிர்ந்து பார்க்கிறாள்.

 

மனோவின் வால் தின்னும் பல்லி கவிதையில்,

     ஆப்பிள் தோட்டத்தில் சந்தித்த பெண் சாத்தானின்
     நிர்வாணம் ரசித்த உலகத்தின் முதல் பெண்"

                "ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதே எத்தனையோ தன்மைகளை மனதிற் கொண்டு அதைப்பிற புத்தகங்களோடு ஒத்தும் உறழ்ந்தும் பார்ப்பதாகிறது. இதுவே நவீன விமர்சகர்களால் பல்பிரதித்துவம் (Inter Textuality) எனப்படுகிறது" என்பார் க. பூரணச்சந்திரன். மனோவின் இப் பிரதியும் அப்படிப் பலவற்றைக் கிளறுகின்றது.

      "எப்படிக் கொல்வது என்பது பற்றி
     முழு அறிவு எனக்குண்டு
     கொலையின் கவிதையியல் குறித்து
     எந்தப் பல்கலைக் கழகத்திலும் வகுப்பெடுப்பேன்
     எனக்குப் பல வழிகள் தெரியம்
     இருந்தாலும் எனக்குப் பிடித்த வழி
     உன் முன்னே என்னைப் பிணமாகக் கிடத்துவது"

     "சிறுநீர் கழித்ததற்காக
     பதிமூன்று லட்சம் முப்பத்து ஓராயிரத்து
     தொள்ளாயிரத்து என்பத்திரண்டாவது முறையாக
     நீ என்னை கடிந்து கொண்டபோது
     உன்னைக் கொல்ல வழியறியாது துயருற்றுந்தேன்
     என் ஆகச் சிறந்த துயரம் நீதான் தெரியுமா?

          இப்படி நகுலனும், ந. பிச்சமூர்த்தியும், யவனிகாவும், ரமேஷீம், D.H. Lawrenceஉம், கொண்ட பல்பிரதித்துவம் பொதிந்த இக்கவிதைத் தொகுப்பு நவீனக் கவிதைப் பரப்பில் மிக முக்கியமான வரவு.

     எதுவுமில்லை
     எதைப் போலும்"

     "ஒரு கட்டு வெற்றிலை
     பாக்கு சுண்ணாம்பு புகையிலை
     வாய் கழுவ நீர்
     ப்ளாஸ்க் நிறைய ஐஸ்
     ஒரு புட்டிப் பிராந்தி
     வத்திப் பெட்டி சிகரெட்
     சாம்பல் தட்டு
     பேசுவதற்கு நீ
     நண்பா
     இந்தச் சாவிலும்
     ஒரு சுகம் உண்டு"

     "மின் விளக்கிலிருந்து வழியும்
     ஒளியின் கடைசிச் சொட்டு வரை
     மதுக்கோப்பையில் ஊற்றியபடியே
     உனக்கென்ன வேண்டுமென்கின்றேன் -
     ஒரு டம்பளர் இரவும்
     தொட்டுக் கொள்ள நிலவுமென்கிறாய்
     என்னிடமிருந்த
     ஒளி நிறைந்த கோப்பையை
     கவிழ்த்து வைத்துவிட்டு
     இரவையும் நிலவையும் சுவைக்கிறோம்
     சுரந்து கொண்டேயிருக்கிறது
     இந்த இரவு"

     "மனவெளி மண்டிலத்தில்
     நினைவோடைத் தாரை
     மடைமாறிப் புனல் பாய
     மஞ்சள் பூனை தாவ
     இன்றெனக்கு வாய்த்தது
     குவார்டர் ஓயிட் ரம்மும்
     கூடக் கொஞ்சம் நகுலனும்
     ஜ மீன் non - being"

மனோவின் பயித்தியக்காரியின் பட்டாம்பூச்சியில் விழித்திருந்த சில நீண்ட இரவுகள் வாய்த்தன.

     பட்டாம் பூச்சி
     தன்னைப் பிரதிபலிக்காத
     கண்ணாடி
     கூடக் கொஞ்சம் கொலைவெறி.
     இந்தப் பயித்தியத்திலும்
     சுகமுண்டு நண்பா -
     வாதையின் குறுவாளுடன்!"

        "எனது பழக்க வழக்கங்களும், அதைவிட இன்னும் எனது இயல்புணர்ச்சிகளின் பெருமையுமே அடியாழத்தில் எதிர்ததுக் கலகம் செய்யும் ஒரு கடமை எனக்கிருக்கிறது. நான் சொலவதைக் கேளுங்கள்! ஏனென்றால், நான் இப்படி இப்படித்தான் இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் எதுவாக இல்லையோ அதுவாக என்னை ஆக்கிக் குழப்பாதீர்கள்! இதை எழுதியபின் ஒரு நூற்றாண்டுக் காலத்தில், அவருடைய வாசகர்களும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறரும் இதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை" (க. பூர்ணச்சந்திரன்). எனவே மனோவை அவர் எதுவாக இருக்கிறார் என இக்கவிதைகள் வழி அறியத்தான் முயற்சித்துள்ளேன். அதில், அவர் எதுவாக இல்லையோ அதுவாக அவரை ஆக்கிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வே பிரதானம்.

உதவிய நூல்கள்:

                2) பாசிசம் மிகச் சுருக்கமான அறிமுகம் - கெவின் பாஸ்மோர் : தமிழில் அ.மங்கை.

                4) கவிதையியல் - க. பூரணச்சந்திரன்.