Dr. Thamizhachi Thangapandian

Thangapandian Illam,
Raja Nagar, Neelangarai,
Chennai – 600 041.

எஸ்.ராமகிருஷ்ணன் பார்வையில்...

  நினைவுகளுக்கு எப்போதுமே தனியான வாசனை இருக்கவே செய்கிறது. நெருக்கமான சிலரைப்பற்றிய நினைவுகள் மனதில் தோன்றியவுடன் அந்த நறுமணம் மனதை நிறைத்துவிடுகிறது. நினைவின் நறுமணத்துக்குக் காரணமாக இருப்பது நட்பும் அன்புமே. எவர் நம் மீது கைமாறு கருதாத அன்பும், அக்கறையும் நேசமும் கொண்டு இருக்கிறார்களோ அவர்களைப் பற்றி எப்போது நினைத்தாலும் மனதில் சந்தோஷம் கொப்பளிக்கத் துவங்கிவிடுகிறது. அப்படித் தனக்கு ஏற்பட்ட தோழமை உணர்வின் நறுமணத்தை தமிழச்சி தங்கபாண்டியன் இந்த நூலில் மிகவும் சுவைபட சித்தரித்திருக்கிறார்.
  தமிழச்சி தங்கபாண்டியன் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர், மண்ணின் மணம் கமழும் கவிதைகளை எழுதிவருபவர், தேர்ந்த நாடக கலைஞர். அவரது தோழமை வட்டத்தில் பாசிமணி விற்கும் பெண்ணும் இருக்கிறாள், ஆங்கில பேராசிரியரும் இருக்கிறார். கவிதாயினி, திரைப்பட நடிகை, பள்ளித்தோழி, வீட்டு வேலை செய்பவர், மருத்துவர், பெரியாரிய சிந்தனையாளர் என்று அவர் கொண்டுள்ள நட்புவட்டம் பெரியது. இவ்வளவு ஏன் தன் தாயையும் மகளையும்கூட தோழிகளாகவே உணருகிறார் தமிழச்சி. அவர்கள் குறித்த தனது மனச்சித்திரத்தை மிகுந்த வாஞ்சையுடன் பதிவு செய்திருக்கிறார் என்பதே இந்த நூலின் தனித்துவம்.
  நமக்கான நண்பர்களைக் கண்டடைவதும், நட்பைக் கொண்டாடுவதுமே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ளும் வழிகளாகும். தமிழச்சி நல்ல நண்பர்களைக் கண்டடைந்திருக்கிறார் என்பதன் அத்தாட்சியே இந்த நூல்.